Pages

Ganesh

Ganesh

Tuesday, February 16, 2010

இரவுகள் ஒத்திவைக்கப்படுகின்றது….


நிலவின் பூரணமும்...
நட்சத்திரங்களின் சிமிட்டலுமாய்
நிறைந்திருந்தது வானம்...
கறுப்பாய் மதி மறைக்கும் மேகம்
எங்கும் தென்படவில்லை...
ஆதலால் மழையில்லை...
கொடியில் உலரப்போட்ட ஆடைகள்
உலரட்டும்...
எங்கோ ஒரு சில்வண்டுமட்டும்
நிசபத்தத்தில் துளையிட்டுக்கொண்டிருந்தது...
காற்றுக்கும் மரங்களுக்குமாய்
ஏதோ ரகசியம் பேசப்பட்டுக்கொண்டிருந்தது...
ரகசியம் ஏன்... நீங்கள் சத்தமிட்டே பேசுங்கள்
நாங்கள் மனிதப்பிறப்புக்கள்...
எங்களிற்கு உங்களின் மொழி புரியாது...
குருவிகளெல்லாம் தூங்கிவிட்டிருக்கும்
நாளையின் ஆச்சரியங்களுக்காய்
அவை அலட்டுவதில்லை....
வால்வெள்ளியொன்று
தூரத்தே நீண்டுமறைந்தது...
வால்வெள்ளிகண்டால் பூவொன்றை நினைத்துக்கொள்...
பாட்டி சிறு வயதில் சொன்னாள்...
இப்போது சிலாகித்துக்கொண்டேன்...
சுவாரசிய கதைகள் எல்லாம்
அவளுடனேயே விலகிப்போனது...
இப்படியே... இந்நொடியே....
இருட்டினுள் கரைந்துபோனால் என்ன...
நாளை மீண்டும்… கடிகாரத்தினுள்
தொலைந்துபோகவேண்டியிருக்காது….
இந்த இரவு எத்தனை பேரால்
இரசிக்கப்பட்டுக்கொண்டிருக்கும்...
எத்தனை இரவுகள் இதுபோல் என்னால்
இரசிக்கப்படாமலேயே தொலைக்கப்பட்டிருக்கும்...
அம்மா அழைக்கிறாள்....
மகன்.. வெளியில பனி விழுது.. உள்ள வா..
நாளைக்கு வேலைக்கும் போகவேணும்...
சுருட்டப்பட்ட இரவுடன்
நாளைக்காய் உறங்கப்போகிறேன்….
மீண்டும் ஓர் மின்சாரமில்லா இரவுவரை
என் இரவுகள் ஒத்திவைக்கப்படுகின்றது....!!!

No comments:

Post a Comment