Pages

Ganesh

Ganesh

Friday, February 12, 2010

அவனாய் அவள்….


அன்றும் இருட்டுக்குள் பாதுகாப்பாகவே சுருண்டிருந்தேன்...ஆனாலும் வழமை மீறிய அழுத்தம் மெதுவாய் என் மீது பரவத்தொடங்கிற்று... என் இதயத்தின் துடிப்பும் இலேசாய் அதிகரிக்கின்றது... அதுவரை பவளப்பேழைக்குள் முத்தாய் பத்திரப்படுத்தப்பட்டிருந்த நான் திடீரென கிடைகள் மாறுகின்றேன்... தூரத்தில் மிக மெல்லியதாய் ஒரு அழும் குரல் கேட்கின்றது... எனக்கு கொஞ்சமாய் புரியத்தொடங்குகின்றது...நான் இதுவரை காணாத ஒன்றை காணப்போகின்றேன்...என்னால் உணர்வுகளை வெளிப்படுத்த முடிவதில்லை…. ஆனாலும் அது ஒரு பொருட்டல்ல அப்போது...

அடிக்கடி வந்துபோகும் என் உயிர் நண்பன் அருகே வந்து என் பொத்திய கைகளுக்குள் ஆதரவாய் தன் கரங்களை பொதித்துக்கொண்டே சொன்னான்... உன் பயணம் தொடங்கப்போகிறது... புதிர்களும் ஆச்சரியமுமாய்... கண்ணீரும் கலகலப்புமாய்.. வெற்றிகளும் தோல்விகளுமாய்... அரவணைப்பும் அதிர்ச்சிகளுமாய்…. இன்னும் பலதாய் உன் பயணத்திற்கான வாசல் திறபடப்போகிறது... ஆனாலும் இப்படியாய் உன்னுடன் நான் கூடவர முடியாது என்றான்….. முதன்முதலாய் அதிர்ந்துபோனேன்... கதறவேண்டும்போல் இருந்தாலும் கண்கள் மூடிக்கிடந்தது... எனை நீங்கிப்போகாதே... உனையன்றி நான் தனித்தில்லை... நீ துணையில்லா பயணம் எனக்கு வேண்டாம்... நான் கெஞ்சிக்கொண்டேன்... என் வேண்டுதல்களின் தொடக்கம் அது...!

நண்பனின் இதல்களிடையே புன்னகை பிரசவமாயிற்று... உன் கலக்கம் வீண் என்றவன் சொன்னான் இப்படியாகத்தானே வருதல் கடினம் என்றேன்... இன்னுமொரு அழகிய உருவில் உனக்காக நான் அங்கே காத்துக்கொண்டிருக்கிறேன்... தைரியம் கொள் என்றான்... இன்னுமொரு உருவிலென்றால் எப்படி உனை நான் இனம் கண்டுகொள்வேன் என்றேன்... என் கேள்விகளின் தொடக்கமது…..!

மீண்டும் அதே புன்னகையுடனேயே கூறி நின்றான்... கண்டதும் நீ கண்டுகொள்வாய்... என் உருவ ஒளி அவளில் தெரியும்... உனக்காய் அவள் தன் வாழ்வளிப்பாள்... உன்னை அவள் மடிக்குள் பொக்கிசமாய் பொத்திவைப்பாள்… என்னிலும் அவளே உனக்கு நெருக்கமாவாள்… உன் முதல் வார்த்தையின் அர்த்தம் அவளை அர்த்தப்படுத்தும்...!! அவனின் அழகுப்பதில் கேட்டு ஆர்வம் பொங்க… இந்நொடியே அவளை கண்டிட பொறுமைகலைந்தேன்... இறுதியாய் ஐயம் தீர்க்க கேட்டுக்கொண்டேன்... நண்பா நீ யார்... இத்தனை நாளாய் என் அருகிருந்தாய்... அன்பாய் எப்பொழுதும் எனை அரவணைத்திருந்தாய்... தனிமை கலைத்து மகிழ்ச்சியில் எனை சூழ்ந்திருந்தாய்.. நண்பா என்றே உனை அழைத்திருந்தேன்.. உன் பெயர்தான் என்ன கேட்டுக்கொண்டேன்…! மீண்டும் புன்னகைத்தே பதிலுறைத்தான்... உன் பயணத்தில் என்னை நீ கடவுள் என்பாய்... உன்னருகே நான் இருந்தபோதும் எனைத்தேடி அழைந்து உனை மனிதனென நிருபிப்பாய்... இந்தநேரம் இதுபோதும்... இனி கேள்விகளுக்குள் உனக்கான பதில் முளைக்கும்..

இதோபோராட்டம் தொடங்கிவிட்டிருந்தது... உள்ளிருந்து பெரும்விசைகொண்டு நான் தள்ளப்பட என் தலை பற்றி இருகரங்கள் வெளியிழுக்க நான் புதிய பயணத்திற்காய் குருதியில் தோய்ந்த உயிர்ப்பிண்டமாய் இரு கால் இடுக்கில் வெளிவிழுந்தேன்... இத்தனைநாள் என் பசி கலைத்த கொடியொன்று என் தொப்புளிலிருந்து அறுபட ஒரு உயிர் இரு உயிர்களானது... தாதி என்னை தூக்கிக்காட்டினாள் அவளிடம்…… உன் மகன் பாரென... ஆனால் நான் கண்டுகொண்டேன்…. என் நண்பனின் ஒளி அவளில் தெரிந்தது... சந்தோசமும் அழுகையும் ஒன்றிணைய…… வார்த்தைகள் வசப்படாததால் எனக்குமுடிந்தவரையில் அர்த்தப்படுத்தி கத்தினேன்..... அம்மா (ங்ங்ங்கே...).....!!!!!! தாதி சொல்லிச்சென்றாள்... குழந்தை அழுவது ஆரோக்கியமானது..... அம்மா அவள் அருகே எனை மலர்த்தி….. நெற்றியில் இதல்பதித்து அணைத்துக்கொள்ள…….. நான் உணர்ந்திருந்தேன்... என் நண்பனின் நெருக்கமும்…… உடல் சூடும்…. அன்பும்.... அரவணைப்பும் அப்படியே குறையாது இருந்ததை அவளிடம்.....!!!!!!!!!!!!!!!!

No comments:

Post a Comment