Pages

Ganesh

Ganesh

Friday, May 7, 2010

12 – 04 – 2006 - திருகோணமலையின் ஒரு கரிநாள்


அன்று திருமலை நகர் இரண்டுதினங்களில் வரப்போகின்ற புதுவருடத்திற்கான எதிர்பார்ப்புகளோடு சுறுசுறுப்பாய் இருந்தது. மதியம் தாண்டிய வேளை… வெயில் தகித்துக்கொண்டிருக்க வீதிகளில் சனக்கூட்டம் சற்றேகுறைவாய் இருந்தது. எங்களது Dialog GSM Branch Officeஇனுள்ளும் நான்கு ஐந்து வாடிக்கையாளர்கள் மட்டுமே.
மதியம் 3.45 மணியிருக்கும் பெரிதாய் ஒரு வெடிப்புச்சத்தம். கட்டடமும் அதிர்ந்தோய்ந்தது. ஓடிச்சென்று வெளியில் பார்த்த நண்பன் ஏதோ Transformerவெடித்திருக்களாம் என்றான், மற்றையவன் உடனே பதட்டமாய் கத்தினான் மச்சான் ஒரு உடல் வீதியில் கிடக்குதடா.... விபரீதம் உணரத்தொடங்கியிருந்தோம், உடனடியாய் கதவுகள் இழுத்துப்பூட்டப்பட்டன. ஒரு Dialog Connection எடுக்க வந்திருந்த ஒருவரைதவிர மற்றையவர்கள் வெளியே ஓடிவிட்டிருந்தனர். அன்றையதினம் Security guardஉடன் சேர்த்து 5 பேர் மட்டுமே Office Staffs. ஆனாலும் எங்களுக்கு சிறிது நம்பிக்கை இருந்தது, அந்த இடத்திலுள்ள பெரும்பாலான சிங்களவர்கள் எங்களுடன் மிகவும் நட்புடனேயே பழகுபவர்கள், ஆதலால் ஆபத்து ஏற்படப்போவதில்லை, ஆனாலும் கொஞ்சம் விழிப்பாய் இருக்கவேண்டும் என எண்ணிக்கொண்டோம். மற்றையது எங்களுக்கான Security Guardஉம் ஒரு சிங்கள இனத்தவர்.

ஆனால் சில நிமிடங்களிலேயே எங்கள் நம்பிக்கைகள் அணைத்தும் பொடியாக்கப்பட்டது. எங்கள்வெளிக்கதவு உடைக்கப்பட்டு உள்கதவு முரட்டுத்தனமாய் இடிக்கப்படுகின்றது, கெட்டவார்த்தைகள் எங்கள் செவிகளை இடிக்கின்றது. உடைக்க முடியவில்லை கொழுத்திவிடுங்கள் என்ற காடையர்களின் குரலில் நாங்கள் சுயமுடைகிறோம். திடீரென நெருப்புப்பிழம்புகளுடன் வெளியே வெடிப்புச்சத்தங்கள் கேட்கின்றது, புரிந்துபோனது எங்களிற்கு, வெளியே நிறுத்திவைத்திருந்த எங்கள் Motor bikeகளுக்கும் நெருப்புவைத்துவிட்டார்கள். உள்ளே பெரும் புகை மூட்டம். Main switchஐகூட அணைக்கமுடியவில்லை. எங்கள் Officeஇன் பின் இருந்த சிறிய corridor மட்டுமே இப்போழுது எங்களிற்கு தஞ்சம். ஆனால் அங்கேதான் AC Machinesகளிதும் Ventilators இருந்தது. அதனால் எந்தவேளையும் அவை Current shortஆகி வெடிக்கக்கூடும் என்ற நிலை. Corridorமேல் பாதுகாப்பிற்காக நாங்கள் அடித்திருந்த உறுதியான வலை இப்பொழுது எங்களுக்கே பாதகமாய் இருந்தது, அதை வெட்டுவது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை.

எங்களிற்கு அடுத்ததாய் இருந்த R.R.Group (Unilever Distributor) இற்க்கு உள்ளிருந்து காடையர்களின் வெறித்தனமான கத்தல் கேட்டுக்கொண்டிருந்தது. அவர்கள் எங்களை கண்டுவிட்டால் அடுத்தநொடி நாங்களும் கருக்கப்பட்டுவிடுவோம் என்ற பயம் எங்கள் மூச்சைக்கூட வெளியேற்ற பயத்தைக்கொடுத்துக்கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் R.R.Groupஉம் அதன் உள்ளிருந்தவாகனங்களும் தீப்பற்றி எரியத்தொடங்கிவிட்டிருந்தது. எங்கும் புகை மண்டலம். இத்தனைக்கு நடுவிலும் கைபேசிகளினூடாக வீட்டோடு கதைத்துக்கொண்டோம், அவர்களிடம் எங்கள் ஆபத்தின் தன்மையை சொல்லவில்லை, நாங்கள் பாதுகாப்பாய் இருப்பதாகவே சொல்லிக்கொண்டோம், அவர்கள் பதட்டமடைந்து இங்கே வந்துவிடக்கூடாது என்பதே எங்களது அப்போதைய எண்ணமாக இருந்தது, ஆனால் அவர்களை Fire serviceஇற்கும் Policeஇற்கும் உடனடியாய் தகவல் சொல்ல சொல்லியிருந்தோம். ஆனால் எங்களைப்பொருத்தவரையில் அதுவே அவர்களது குரல்கேட்கும் இறுதிசந்தர்ப்பம் என்றே எண்ணிக்கொண்டோம். நணபர்கள் அத்தனைபேரினதும் அழைப்புக்கள் வந்துகொண்டிருந்தது. அவர்களிடம் மட்டும் முடிந்தவரையில் எங்கள் நிலையைகூறி அறிவிக்கவேண்டியவர்களிற்கு உடனடியாய் அறிவிக்ககேட்டுக்கொண்டிருந்தோம்.

எப்படியாயினும் வெளியேறிவிடவேண்டுமென்ற இறுதிமுடிவோடு கையில்கிடைத்த கல்லு, இரும்பைக்கொண்டு வலையை உடைக்க மாறி மாறி முயறசித்துக்கொண்டிருக்க மேல் நோக்கிய துப்பாக்கிச்சூட்டுச்சத்தங்கள் சரமாறியாய் கேட்கத்தொடங்கியிருந்தது, கலவரத்தை கட்டுப்படுத்த(!) இராணுவம் வந்துவிட்டதை அறிந்துகொண்டோம். இப்பொழுது கைகள் கிழிக்கப்பட்டதையும் பொருட்படுத்தாது இயன்றவரை வலையை உடைய்த்துக்கழற்ற முயன்று கிட்டத்தட்ட 2 ½ மணித்தியாள போராட்டத்தின்பின் வலையை கழற்றிக்கொண்டு அந்த இடத்திலிருந்து வெளியேறி அடுத்திருந்த விவேகானந்தா தமிழ் மகா வித்தியாளயத்தினுள் குதித்து அங்கிருந்த 3 மாடிகட்டிடத்தின் 3வது மாடியில் பதுங்கிக்கொண்டோம்.

இப்போது வன்செயலில் சூறையாடப்பட்ட திருமலை நகரத்தை ஓரளவு காணக்கிடைத்தது. மத்திய வீதியில் Marketதொடக்கம் இராஐவரோதயம் வீதிவரையிருந்த அத்தனை தமிழ் உரிமையாளர்களது கடைகளும் தீயிட்டு கொழுத்தப்பட்டிருந்தது. எங்கும் புகை மண்டலம்…. எங்கும் இராணுவம்…. எங்களிற்கு உதவி கேட்கவும் பயம்…. பொதுமக்கள் யாரும் இல்லா வீதியில் நாங்களும் எதுவும் செய்யப்படலாம் என்ற அச்சம். பதுங்கியபடியே இருக்கின்றோம். நேரம் உருண்டோட ஓரளவு அமைதி நிலவத்தொடங்குகின்றது. உதவிகேட்க சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருக்க எங்கள் Officeஇற்கு அடிக்கடி வந்துபோகும் ஒரு Navy Commanderஐ கண்டுகொண்டதும் இதுதான் சந்தர்ப்பம் நடப்பது நடக்கட்டுமென்று அவரை அழைத்து உதவி கேட்க அவரும் எங்களை வெளியே அழைத்து பயப்படவேண்டாம் எனசொல்லி ஒரு இராணுவ சிப்பாயுடன் வித்தியாலயம் வீதிவரை சென்றுவிடுமாறு சொல்ல உயிர்தப்பிய ஆச்சரியத்துடன் கரிபடிந்துபோன உடல்களுடன் மீண்டுகொண்டோம். ஆனாலும் அன்று என்னால் பாதுகாப்பு காரணங்களால் வீடுசெல்ல முடியாதுபோக நண்பனின் வீட்டில் தங்கி மறுநாளே வீடடைந்தேன்.

இது எங்கள் மறுபிறப்பு. அந்த வன்செயலில் எந்தவிதத்திலும் சம்பந்தப்படாத எத்தனையோ அப்பாவிகளின் உயிர்கள் சூறையாடப்பட்டதும் பெண்கள் நாசமாக்கப்பட்டு கொள்ளப்பட்டதுமான கறைபடிந்துபோன உண்மைதகவல்கள் பல இன்றுவரை வெளிக்கொண்டுவரப்படவில்லை. அந்த பயங்கர இனவெறிஆட்டத்தில் ஒருவேளை நாங்கள் பலியாகிப்போயிருந்தால்கூட இன்றுவரை நடந்துபோன அத்தனை அநியாயப்படுகொலைகளில் ஒன்றாய் ஒரு செய்தியாய்மட்டுமே பதிவாகியிருந்திருக்கும் என்பதே யதார்த்தம்
.