
கடற்கரை மணல்...
தனிமையில் நிலா...
என்னுடன் நீ மட்டும்...
மொழியில்லை.... ஆனாலும்
ஆயிரம் கதைகள் பேசிக்கொண்டோம்... !
சலனம்தான் உன் அடையாளம்...
உன்னால் என் சலனங்கள அத்தனையும்
தானே கலையும்... !
உனக்கும் எனக்குமான உறவை
மொழியால் இதுவரை
அர்த்தப்படுத்த முடியவில்லை...!
அதனால் என்ன...
உன் ஸ்பரிசங்கள் தூண்டும்
அழகிய உணர்வுகள் ஒவ்வொன்றும்
என்னுள்... விவரனையில் சிறைப்படுத்த இயலா
உணர்வுகளாகவே பதிவாக்குகின்றேன்...!
இயந்திரமாய் ஓடும் மணித்துளிகளில்
உன் கொஞ்சலுடனான நிமிடங்கள் மாத்திரமே
எனக்கான செலவுகளாய் வரவுவைக்கப்படுகின்றன...!
என் காதோர உன்செல்லச்சினுங்கல்கள்
ஆயிரம்... ஹைக்கூக் கவிதைகள்... !
என் உயிர் தொடும் உன் சீண்டல்கள்
பீத்தோவன் ஹார்மோனிய மெல்லிசைகள்...!
என் தலைகோதும் உன் தீண்டல்கள்
நூறு மயிலிறகுத்தோகைச் சாமரங்கள்...!
என் காதுமடல் வருடும் உன் சேட்டை...
“செல்லி”யின் சில்மிச கவிவரிகள்…!
அதனால்தான்...
இறந்துபோன நாட்களில்
இறக்காத பொழுதுகள் எதுவென்றால்...
இமைகள் மூடிக்கொள்ள... சொல்லுவேன்...
கடற்கரை மணல்...
தனிமையில் நிலா...
என்னுடன் 'குளிர்த்தென்றல்'...
மொழியில்லை... ஆனாலும்
ஆயிரம் கதைகள் பேசிக்கொண்டோமே...
அந்த நிமிடங்கள்தான்...
என் இத்தனை வருட நெடிய நாட்களில்
நான் வாழ்ந்த... நிறைந்த... கவிதைப்பொழுதுகள்...!!!!

No comments:
Post a Comment