Pages

Ganesh

Ganesh

Wednesday, March 17, 2010

மரம்


மண் புதைந்த கரங்களுடன்

எழுந்து நிற்கிறேன்....

உன்னிடம் எதுவும் பறிப்பதில்லை நான்....

உணர்ச்சிகளற்ற உன்னை நானென்பாய்

எனையறிந்தும் அறியாதவனாய்...

அது ஆறறிவின் குணமென்று பொருத்துநிற்கிறேன்...

இது என் தேசம்... நீ ஒண்டவந்தாய்...

நான் ஒதுக்கப்பட்டேன்...

நீ பெற்றுப்போட நான் வெட்டப்பட்டேன்...

நீ செத்தபோதும் நனே வெட்டப்பட்டேன்...

உன் ஒவ்வொரு அசைவிற்கும் நான் தேவை...

நீ அறிந்துகொள்... எனக்கு நீ தேவையில்லை...

நான் காப்பவன்... நீதானே அழிப்பவன்...

நீ சுவாசிக்கும் காற்றும்..

ஜீவிக்கும் நீரும் எனது பிச்சை...

இந்த மண்ணிற்கு உரமும்...

நீ உயிர்வாழ பலமும்… எனது கொடை...

வான் பெய்யும் மழையும்...

மண்ணோடும் நதியும்... என் ஸ்ருஷ்டி...

சுயநலத்தின் குத்தகைக்காரன் நீ...

உனக்குமாய் உணவு சேர்ப்பவன் நான்...

காக்கைக்கும்.... குயிலிற்கும்

பேதமை இல்லை என்னில்...

என் உடல் தறித்த நீ விட்டுவைத்தால்

மீண்டும் தளிர்த்துக்கொள்வேன்...

கலைப்படைவாய் நீ.. என் கீழே வந்தொதுங்கு...

நிழல்தருவேன் நான் மறுப்பின்றி உனக்குமாய்...

பேதை மனிதா…. ஒருமொழி கேளாய்

உயர்தினையென்று.. நீயே உன்னை பீத்திக்கொள்...

மரமென்று மட்டும் உனை வையாதே....

நாங்கள் உயர்ந்தவர்கள்....

Friday, March 12, 2010

அந்திச்சபதங்கள்


என் உள்மன வேர்களில் விழட்டும்

உன் கோடரி....

ஆழி என்னுள் புகுந்து

மொத்தமாய் சுருட்டிச்செல்லட்டும்

நீ பற்றிய நினைவுகளை...

பற்றிபடரும் காட்டுத்தீ

என்னிலும் நுழைந்தெரிந்து

கருக்கிச்செல்லட்டும்

என் ஞாபகச்சருகுகளை...

வறண்ட நிலத்தில்

விழுந்த நீர்த்திவளையாய்

காணாமல்போகட்டும்

கசந்துபோன எண்ணக்குப்பைகள்..

விழித்தெழும் வேளை

சூரியன் புதிதாய் முளைக்கட்டும்...

உன்னை ஞாபகம்செய்யும் நிலவு

இவ் இருளோடு தொலைந்துபோகட்டும்...

நாளை வேறு புதிதாய்

கறைகழுவிய நிலவு பிறக்கட்டும்...

இவ்விரவு தூக்கத்தோடு நான் இறந்துபோய்

புதிய பொழுதின் புலர்வின்போது

உனை முதல்கண்ட நொடிக்கு

முன்னைய கணம்வரையிருந்த

நானாய் மறுபிறப்பெடுப்பேன்...

இப்படியான….

ஒவ்வொரு இரவுச்சபதமும்

தோற்றுப்போகிறதடி என் காலையின் புலர்வில்...

Wednesday, March 10, 2010

THE HURT LOCKER


6 Oscar Awardsஐ தனதாக்கிக்கொண்ட சினிமா எனும் ஈர்ப்பினால் பார்க்கமுனைந்த படம். இயக்கியிருப்பது Kathryn Bigelow எனும் பெண் இயக்குனர். ஈராக்கில் பணிபரியும் U.S Army Explosive Ordance Disposal (EOD) Unit மையப்படுத்திய கதை, களம் ஈராக் War. மூன்று கதாபாத்திரங்களே கதையை பெரும்பாலும் நகர்த்துகின்றது. Sergeant William Jamesஆக Jeremy Rennerஉம், Sergent J.T.Sanbornஆக Anthony Mackieஉம், Owen Eldridgeஆக Brain Gereghtyஉம் நடித்திருக்கின்றார்கள். சினிமா என்பதை நம்ப மறுத்து ஈராக்கின் வீதிகளில் ரசிகனையும் படபடப்புடன் நிறுத்திவைக்கின்றது ஒளிப்பதிவும் இசையும். எங்கேயும் அத்துமீறா பின்னனி இசை பல இடங்களில் மெளனமாகி உண்மைத்தன்மையுடனான சத்தங்களை மட்டுமே பதிவாக்கி களத்தை முன்நிறுத்துகின்றது. காட்சியின் ஒவ்வொரு நகர்வும் மிரட்டல்.

முதன் முதல் குண்டை செயலிழக்கும் முயற்சி தோல்வியாவதிலிருந்து அடுத்துவருகின்ற ஒவ்வொரு குண்டு செயலிழக்கும் காட்ச்சிகளின் போதும் இதயத்துடிப்பு எகிறுவதை கட்டுப்படுத்த இயலவில்லை. அந்த பாலைவன Sniper gun தாக்குதலுக்கான காத்திருப்பின் போது Jeremyயும் Eldrichயும் சோர்ந்துபோகும் சந்தர்ப்பங்களில் ஏதேனும் விபரீதம் நடந்துவிடுமோ என ஒவ்வொரு நொடியும் பயங்கொள்ளச்செய்கிறது. வெடிமருந்துகள் நிறைந்துகிடக்கும் ஒரு Warehouseஇல் கிடக்கும் வெடிபொருள் வைத்து தைக்கப்பட்ட சிறுவனின் உடல் இராணுவ முகாமிற்கருகில் DVDவிற்கும் சிறுவனுடையது என நினைத்து Eldridgeஅழுகின்ற காட்சியிலும் அதைத்தொடர்ந்துவருகின்ற எதிர்பாராத குண்டுவெடிப்பும் நெஞ்சை நெகிழ வைத்துப்போகின்றது. தன்னைகாப்பாற்றச்சொல்லி ஒரு தற்கொலைக்குண்டுதாறி கெஞ்சுவதும் அதுமுடியால் போக அவன் வெடித்துசிதறியபின்னர் அதிர்வில் தாக்கப்பட்டு கீழவிழுந்த Eldrichவிழித்துப்பார்க்கையில் இது எதையுமே பெரிதாய் எடுத்துக்கொள்ளாத ஒரு சிறுவன் மொட்டைமாடியில் நின்று பட்டம் விடுகின்ற பதிவொன்றே அங்கே மலிந்துவிட்ட மரணங்களை அப்பட்டமாய் காட்டி நிற்கின்றது.

யார் எதிரி, யார் பொதுமகன் என இனங்கான முடியாமல் சிப்பாய்கள் தடுமாறுகின்ற காட்ச்சிகளில் பதட்டம் எமக்கும் தொற்றிக்கொள்கிறது. சரி தவறு என்ற கேள்விகளிற்கப்பால் கொடுக்கப்பட்ட பணிக்காக வேறு ஏதோவொரு தேசத்தில் போரிட்டு பரிதாபமாய் இறந்துபோகின்ற ஒவ்வொரு இராணுவ வீரனும் சாதாரண உணர்ச்சிகள், குடும்பங்கள் என எல்லோரையும் போலவே வாழ்வுரிமைகொண்ட மனிதன்தானே என்கின்ற உண்மை மறுக்கப்படமுடியா து சுயத்தை ஏதோ செய்கிறது. இந்த வாழ்க்கை வேண்டாமென்ற முடிவுடன் வீடு திரும்பும் Eldridge சாதாரண வாழ்க்கையுடன் பயணிக்க இயலாது மீண்டும் ஈராக திரும்பி இன்னுமொருவருட Commitmentஉடன் Bomb Disposal Suit அணிந்து ஈராக்கின் வீதியொன்றில் குண்டு செயலிழக்கச்செய்யும் நடவடிக்கைக்காய் நடந்து செல்கையில் அந்த வெறுமையான வீதியைப்போலவே பயங்கரத்தைஒழித்துவைத்திருக்கும் இன்னும் ஏதோவொரு நிச்சயமற்ற கணத்தை நோக்கிய அவனது பயணத்திற்காய் என் கண்களின் ஓரமும் தன்னிச்சையாய் ஈரமானது.

Tuesday, March 9, 2010

“ஏக்கம்”


நான் கவிஞன் அல்ல...
எண்ணங்களின் பகிர்வாளன்...
கவிதை சொல்லத்தெரியாது...
ஏதோ ஒன்றை எழுதத் தெரியும்....
இருந்தும் நண்பி சொன்னாள்...
கவி சொல் என்று....
கரு எது… நான் கேட்க...
“ஏக்கம்” என சொல்லிச்சென்றாள்...
அடி பெண்னே...
அது ஒற்றைச்சொல் அல்ல...
உணர்வுகளின் கருவூலம்...
பெரியோனே தெளிதல் கடிது...
நான் சிறியோன்...
இது சுமை சொல்...
எங்கே தொடங்குவேன்....

கூடு கலைந்து பறந்தோடி
எட்டநின்று கண்ணீர்விடும்
ஈழத்து அகதிக்குருவிகளின்
ஏக்கத்தை தவிப்புடன் சொல்வேனா...!
சாட்சியின்றி புதைந்துபோன
உறவுகளின் ஆன்மாக்கள் இங்கே
எம்மிடேயே புலம்பி அழும் ஏக்கத்தை
நானும்…தமிழனாய் சொல்வேனா....!
வித்திட்டவர் சிதைந்துபோக
வாழ்வின் அடி நுனி சிக்கலில்
சிக்கித்தவிக்கும் எம் பிஞ்சுகளின்
ஏக்கத்தை… கதறலுன் சொல்வேனா...!
தாய் மண் மடியில் மறுக்கப்பட்டவாழ்வுதேடி
கூடிக்கழித்த உறவுகள்.. நண்பர்கள் விலக்கி
இரவல் மண்மிதித்து மிதியடியாய் வாழும்
எம் சோதரர் ஏக்கங்களை
விழிகசிய நான் சொல்வேனா...!

இல்லை... இவைவிடுத்து வெளிச்சென்று....

பொன்னிற்காய்... பொருளிற்காய்...
பெண்ணிற்காய்... ஏங்குகின்ற
பேதைகளின் ஏக்கம் என்று...!
தொலைந்துபோன பொருள்தேடி
தோற்றுப்போனவன் ஏக்கம் என்று...!
தவறிவிட்ட உறவுதந்த
வெறுமையின் உள்ளிருந்து
பிரிவு சுமந்தவன் ஏக்கம் என்று...!
உடைந்துபோன காதலுக்காய்
ஆயுளின் இறுதி நிமிடநேரம் வரையில்
வெளித்தெரியாமல் பொத்தி வைத்திருக்கும்
காதலித்தவர் ஏக்கம் என்று...!
பொழுதுகளெல்லாம் உறங்கிகெடுத்து
இருண்டபின் விழித்தெழுந்து
புலம்புபவனின் பொருள்ளற்ற ஏக்கம் என்று...!
பலன் பார்த்து.. நட்சத்திரம் பார்த்து
செயல் காணும் மூடர்களின்
நல்லநாள் பற்றிய பலனற்ற ஏக்கம் என்று…!

இப்படியாய்... இன்னும்.. இன்னுமாய்...
ஓராயிரம் பார்வைகொண்ட
ஒற்றைச்சொல்லடி இவ் ''ஏக்கம்''...
நான் சிறியோன்...
தொடாதது இன்னும் அதிகம்....
தொட்டதோ இங்கே கொஞ்சம்....
என்னை ஆட்டிவைக்கின்றது இந்த ஏக்கம்...
நான் எப்படிச்சொல்வேன் எனும் ஏக்கம்....

மன்னித்துவிடு...
நான் கவிஞன் அல்ல...
எண்ணங்களின் பகிர்வாளன்...
கவிதை சொல்லத்தெரியாது...
ஏதோ ஒன்றை எழுதத் தெரியும்....!!!

Monday, March 8, 2010

Paa - ஒரு பார்வை


கொஞ்சம் காலம் தாழ்த்திய பார்வைதான்என்றாலும் இப்பொழுதுதான் எனக்கு காணக்கிடைத்தது, ஆதலால் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற ஆவலும் தோன்றிற்று.

மனதை கனக்கவைக்கும் கவிதையாய் ஒரு சினிமா. ரத்தம், Punch Dialogs, காட்டுக்கத்தல், இரட்டையத்த வசனங்கள், நடைமுறையிலிருந்து விலகி நிற்கும் காதல் என்றே சலித்துப்போய்க்கிடந்த ரசிகர்களிக்காய் மெல்லிய மழைத்தூரலாய் நனைத்துச்செல்லும் களம் என மனதோடு நெருக்கமாகிவிடுகின்ற கதை. ஆங்கில உப தலைப்புடன் பார்க்கக்கிடைத்ததால் வேற்றுமொழிப்படமென்ற உணர்வு மறந்து கதையுடன் ஒன்றிப்போகமுடிகின்றது. ஆரம்ப எழுத்தோட்டமே ரசிகனை கதைக்குள் இழுத்துவைத்துக்கொள்கின்றது.

Progeria என்ற நோய் பற்றி கேள்விப்பட்டிருந்தாலும் அந்த வாழ்க்கைக்கு அருகிருந்து பார்க்கும்போது நெஞ்சம் பாரமாகின்றது. மூன்று கதாபாத்திரங்களைச்சுற்றியே வட்டமிடும் கதை எங்கேயும் தொய்ந்துபோகாதது திரைக்கதையின் பலம். இசை இளையராஜா, 80களின் இளையராஜாவை மீண்டும் காணக்கிடைக்கிறது. ஏற்கனவே மனதை திருடிச்சென்ற பாடல்கள் ஆங்காங்கே பின்னனி இசையிலும், ஒரு பாடலுமாய் என அழகாய்த் தொட்டுச்செல்கின்றது. பி.சி.சிறிராமின் கமரா கதையுடன் கைகோர்த்து நடக்கின்றது. வசனங்கள் அருமை. நடிகர்கள் சரியான தேர்வு. தாயாய் வித்தியா பாலன் முழுமை சேர்க்கிறார். இளம் MPயாய் அபிசேக் பச்சன்… ராகுல் காந்தியின் style தெரிகின்றது, freshஆக இருக்கின்றார்.

எல்லாவற்றிற்கும் மேலாய் கதையின் நாயகன் 13 வயது சிறுவன் Auro, 68 வயது அமிதாப்பச்சன் என்பதை நம்ப முடியாமலே இருக்கின்றது. தன்னைத்தவிர யாருமே இந்த பாத்திரமாய் வாழமுடியாது என மனுசன் சொல்லாமல் சொல்கிறார். குழந்தைதன குறும்புகளுடன் எல்லைமீறாத அந்த கதாப்பாத்திரமே கவிதை பாடுகின்றது.

Indian President ஐ பார்க ஆயத்தமாகி அது முடியாமல்போக யாருடனும் பேசாமல் அறையை பூட்டிக்கொண்டிருப்பதும் அம்மாவும் பாட்டியும் video game விளையாட ஆற்றாமல் வந்து அதை பறித்து தான் விளையாடுவதும் குழந்தைத்தன psychological touch. President ஐ காண செல்வதைப்பற்றி பாட்டி நம்பிக்கையின்றி பேசும்வேளையில் அந்த குரங்கு பொம்மையிடம் போய் Aren’t u a non vegetarian? Eat her up என்று சொல்வதும், பாட்டியை Bumb என்ற அழைப்பதற்கான காரணத்தை அபிசேக்கிடம் குழந்தை தனத்துடன் சொல்வதும், தன்னுடன் அடிக்கடி பேச வரும் அந்த சிறுமியை கண்டு விலகி ஓடுவதும், அதற்கான காரணத்தை இறுதிகாட்சிகளில் சொல்வதும் என சின்ன சின்ன காட்சிகளைகூட அழகாய் சொல்லியிருக்கிறார்கள். அபிசேக்கின் அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகளில் மட்டும் லேசாய் சினிமாத்தனம் தெரிகின்றது, அது தவிர்க்கப்பட்டிருக்களாம். நோயின் தன்மை வெளித்தெரியும் சந்தர்ப்பங்களில்அந்த சிறுவனுடன் சேர்ந்து எங்களின் இதயமும் அடித்துக்கொள்கிறது. ஊகிக்கக்கூடிய முடிவுதான் என்றாலும் மனதை பாரமாக்கிவிடுவது அமிதாப்பின் நடிப்பு.

இப்படியான வேறுபட்டகோணங்களினூடான சினிமாவின் யதார்த்தங்களினூடான பயணமே ரசிகனை பூரணமாய் திருப்திப்படுத்த முடியும். இப்படியான பயணத்தை தமிழ் சினிமா எப்போதுஆரம்பிக்கப்போகின்றது.

மொத்தத்தில் இக்கவிதையை எழுதி இயக்கிய Director R.Balkiஇற்கு ரசிகர்கள் சார்பாக ஒரு Hug கொடுக்கலாம்.

Tuesday, March 2, 2010

காதல் தோல்வி


கடற்கரை….
சுண்டல்….
இரு நண்பர்கள்….
ஒருவன் சோகமாய்….
ஒருவன் கேள்வியாய்…..
மச்சான் என்னடா நடந்தது...
காதல் தோல்விடா...
காதல் தோற்காது.. நீ தோற்றாய் என சொல்...
ஏதோ ஒன்று.. மொத்தத்தில் தோல்வி மிச்சம்...
இருக்கட்டும்... நடந்தது சொல்...
உனக்கே தெரியுமே.. நான் காதலித்தேன்....
நீ மட்டுமே காதலித்தாய்.. ஒருதலைக்காதல்....
காதலின் ஆரம்பம் ஒருதலைதானேடா....
சரி... நீ காதலின் ஆரம்பத்திலிருந்தாய்... மேலே சொல்...
அவளுக்கு கவிதையென்றால் உயிர்....
ஓ.. கவிதைக்கு கவிதை உயிரா...
வெந்தபுண்ணில் வேலைப்பாய்ச்சாதே...
சரி.. சரி... அதற்கும் உன்தோல்விக்கும் ஏது சம்பந்தம்....
அவளிற்கு காதலன் கவிஞனாய் வேண்டுமாம்...
போச்சுடா… முதல்பந்தே உனக்கு இப்படியா…
எனக்கு கவிதையே வராது....
அதுதான் ஊரறிந்த விசயமாச்சே....
நானும் முயற்சித்தேன்... என் அறைதான்குப்பையானது...
அதற்குமுன்மட்டும் சுத்தமாய் இருந்ததோ...
கிண்டல்செய்யாதே... அழுதுவிடுவேன்...
செய்யவில்லை..நீ செப்பு...
முடிவில் கள்ளமாய் ஒரு வழி கண்டேன்...
அதுதான் உனக்கு கை வந்த கலையாச்சே...
நண்பன் ஒருவனின் கவி திருடி அவளிடம் சேர்ப்பித்தேன்..
அடப்பாவி... ஆனாலும் கைகூடியிருக்கவேண்டுமே காதல்...
இல்லையடா... விளையாடி விட்டது விதி என்னில்…
நீ என்ன மைதானமா.. விதி உன்னில் விளையாட.. நடந்ததுசொல்…
கைமாறிப்போனதடா என் காதல்...
உன் காதல் என்ன ரூபா நோட்டா... விசயத்திற்கு வா…
அவள் அவனுடனே கூடிவிட்டாள்...
அவனென்றால்... உண்மையில் கவியெழுதியவனா...
ஆமாமடா... அவனேதான்... துரோகி...
என்ன கொடுமையடா... எப்படியடா நடந்ததிது....
கவிதான் என நினைத்து.....
கவிதான் என நினைத்து.....???
கவி முடிவில் இருந்த அவன் பெயரையும் அன்றோ
எழுதிகொடுத்துவிட்டேன் அவளிடம்....
போடா…… ஆஐஉஉஇ ஊஏஎள புபநசஞகூ கடமற.....
(இவனை இப்படியாய் திட்டாமல் என்செய்வான் நண்பன்)