
வெண்ணிலவு...
எத்தனை கவிகளால்
எத்தனை கவிகள் பாடப்பட்டாயிற்று..
அழகின் வர்ணனைகள் எல்லாம்
உன்னைச்சுற்றித்தானே வட்டமிடுகின்றன...
மனிதனின் முதல் ரசனை
உன்னிலிருந்தே ஆரம்பித்திருக்கும்...
உலகின் அத்தனை மாற்றங்களினதும்
மொத்த சாட்சியம் நீயாய்த்தானே இருப்பாய்....
எத்தனை இரகசியங்கள்
நீமட்டுமே அறிந்திருப்பாய்...
எத்தனை அழகுகளிற்காய்
நீ உவமை ஆகியிருப்பாய்...
ஆனாலும் அலட்டவில்லை...
நீ.. நீயாகவே இருக்கின்றாய்..
ஆதலால்... புத்தனிற்கு போதிமரம்....
எனக்கு… நீ... வியப்பதற்கில்லை…
அறிவியல் சொல்லும்...
பூமியின் சிதறல் என்றும்...
பசிபிக் ஆழியில் உண்டு
உனது பள்ளம் என்றும்...
காற்றில்லா கோள் என்றும்...
மனிதனின் வாழ்விற்காய்
பொருத்தமற்ற கிரகமென்றும்...
உன்னில்… நடப்பவன் பாய்வானென்றும்...
உன் ஒருபக்கம் மர்மம் என்றும்...
பல நூறு செய்தியெல்லாம்
அறிவியல் கண்டுசொல்லும்...
சொல்லட்டுமே... அதனாலென்ன...
மழலையில்...
அம்மாஇடையில் நானிருக்க…
இரவுப்பொழுதுகளின்…
உணவூட்டும்வேளைகளில்
எம்முற்றத்தில் நின்றபடியே…
உன்னில் ஒருபாட்டி இருப்பதாய் கதைகள் சொல்ல
அழகாய் இரசித்து வியந்தேனே..
இப்போது கூட…
உன்னை காணும் இரவுகளில்..
மாற்றமின்றி தெரிகின்றது
அந்த பாட்டியின் உருவம் அப்படியே பசுமையாய்..

No comments:
Post a Comment