Pages

Ganesh

Ganesh

Thursday, February 11, 2010

அஸ்தமனமில்லை


மூடியிருந்தது இமைகள்...
தொலைந்திருந்தது தூக்கம்...
கண்ணீர் மறைத்து மனம் அழுதபடி இருந்தது...
காரணம் புதியதில்லை....
ஆனாலும் பழையதுமில்லை...
இரத்தம் இன்னும் கசிந்தபடிதான் இருக்கின்றது..
ரணம்.. ரணமாய்த்தான் இருக்கின்றது..
சொற்களால் சொல்லிவிட முடியுமா..
அவை கருத்துக்களின் பரிமாற்றத்திற்கானது..
கொந்தளிக்கும் உணர்வுகளின்
விம்பமாகும் வலிமையற்றது...
புண்ணாய்ப்போன உடலுடன்
புதையுண்டு கிடக்கிறோம்..
இன்னும் செத்துப்போகவில்லை... - அதை
துரோகத்தின் ஈட்டிகள் குத்துகையில்
வலி உறுதிசெய்கின்றது....
உயிருடன் புதைக்கப்பட்ட
உறவுகளின் இறுதி ஓலம்
இன்னும் செவிப்பறையில்
ஓங்கி.. ஓங்கி.. அறைகிறது..
உணரமுடிகிறதா உங்களால்...
சகோதரிகளின் ஆடைகள்
கிழிக்கப்பட்ட ஈனச்சத்தமும்
கணம் தொறும் சுயத்தில்
ஈட்டிகள் பாய்ச்சுகின்றனவே...
உணரமுடிகின்றதா உங்களால்...
தாம் தமிழனென்று அறியாமலே
உடல்சிதறி உருக்குலைந்துபோனதே
எம் பிஞ்சுத்தலைமுறை..
அதன் மொழியில்லா கதறல்கேட்கும்
ஆயிரமாயிரம் கேள்விகள்
இதயத்தை கருக்குமே...
உணரமுடிகின்றதா உங்களால்...
என்ன தவறிழைத்தோம்..
எவர்வீட்டு குடிகெடுத்தோம்...
வலிக்கின்றது.... உயிர் வலிக்கின்றது...
ஆயிரம் யுகங்கள் கழியட்டுமே..
சூழல் எதுவுமாய் மாறட்டுமே...
ஆறாத ரணங்கள் ஆறாமலேயே இருக்கும்..
அடிமனஎரிமலை குழம்பும்
கனன்றுகொண்டே இருக்கும்..
அது ஈழத்தின் பயணத்தை உயிர்ப்புள்ளதாக்கும்...
ஆனாலும்.. இன்றொன்று…
நரமாமிசம்தின்ற நரிகளின்
நர்த்தன காலம் இது....
மயங்கப்போவதில்லை தமிழன்....
மனம்வெந்து சொல்லுகிறான்..
எம் குலமழித்தவனே...
நிச்சயம் பார்ப்பாய்
உன் குலம் நாசமாய்ப்போகும்...!!!!!!

No comments:

Post a Comment