
கடந்தது வெறும் ஐந்தே வருடங்கள்...
ஆயுசுக்கும் மறைய போவதில்லை வடுக்கள்..
கண்களை மூடிக்கொண்டால்
மீண்டும் விழித்திரையில் சுழன்றடிக்கும்
ஆழிப்பேரலை அகோரக்கணங்கள்...
அறைமணிப்பொழுதில்
ஆயிரமாயிரம் கனவுக்கோட்டைகள்
அடியொடு தகர்ந்துபோக...
உறவுகளற்று அம்மணமாய் நின்றோம்...
நூற்றில் இருந்து ஆயிரமாயிரமாக
உடலங்களின் தொகை உயர்வதாய்
செய்திகள் கதறும் கணமெல்லாம்
எஞ்சியவர் இதயங்கள்
சிதறிக்கொண்டே இருந்தன..
ஊரின் ஓரத்தில் சுடுகாடு இருந்தது..
அன்று சுடுகாட்டின் மத்தியில்போய்
ஊர் குந்திக்கொண்டது...
சுனாமியின் அறிமுகம் இப்படியா இருக்கவேண்டும்...
இன்னும் உடைந்துபோன எத்தனையோ உறவுகள்
முறையாய் ஒட்டிக்கொள்ளவில்லை...
சிலரிற்கு நாட்காட்டி அன்றையபொழுதின்பின்
புறட்டப்படவேயில்லை...
சோகங்களை முழுதாய் சொல்லப்போனால்
வார்த்தைகளும் நொண்டியடிக்கும்..
அவற்றிற்கு அத்தனை வலிமையில்லை...!
ஆகாயம் தாண்டிப்பறந்தாலும்..
புதிய கிரகம்கண்டுநுழைந்தாலும்...
இன்றுவரை மனிதன் இயற்கைமுன்பூஜ்ஜியம்தான்...
கனவுகளுடன் கரைந்துபோனவர்களே..
உங்களின் வெற்றிடங்கள் எங்கள் மத்தியில்
நிரப்பப்படாமலேயே இருக்கும்...
அவை உம்மை ஞாபகப்படுத்தியபடியே இருக்கும்
இவ்வுலகில் எப்போதும்....!!!

No comments:
Post a Comment