Pages

Ganesh

Ganesh

Monday, February 15, 2010

வழிதவறிய மேய்ப்பனின் ஆடுகள் நாங்கள்….


நாங்கள்
கருவிலிருந்தே கசக்கியெறியப்பட்டவர்கள்...
சருகுகளாகவே தளிரானவர்கள்....
கருகிய விதையில் வித்தானவர்கள்...
சிசுவிலேயே சிலுவை ஏறியவர்கள்....
பாவத்திற்காய் பரிசானவர்கள்...
வழிதவறிய மேய்ப்பனின் ஆடுகள்...
தவறரியாமலேயே தள்ளிவைக்கப்படுபவர்கள்....
வேர்களினாலேயே நஞ்சூட்டப்பட்டவர்கள்....
இன்றைய நிலையில்
விஞ்ஞானத்தினாலும் விடுவிக்கமுடியாதவர்கள்....
ஆமாம்…
எயிட்ஸ் என்னும் எமனிடம் தத்துக்கொடுக்கப்பட்டவர்கள்…

நாங்கள்....
அசிங்கங்களல்ல...
தொட்டால் தொற்றும் கிருமிகளல்ல...
கொலையாளி வம்சங்கங்களல்ல...
பட்டால் பற்றிக்கொள்ளும் சாபங்களல்ல...
உணர்வுகளற்ற சதைபிண்டங்களல்ல...

மறுக்காதீர்கள்... நாங்கள்....
சபிக்கப்பட்டதும்...
உருக்குலைந்ததும்...
சிறுகதையானதும்...
இருண்டுபோனதும்...
கந்தலாய்க்கிடப்பதும்...
ஒதுங்கிச்சாவதும்...
உங்களினாலேயே... மறுக்காதீர்கள்...

நாங்கள்....
பெரிதாய் எதுவும் கேட்கவில்லை...
வாழும் வரை வாழவிடக் கேட்கிறோம்...
எங்களிடம்...
புன்னகைப்பதால் புண்ணாய்ப்போகமாட்டீர்கள்...
அருகிருப்பதால்... அழுகிவிடமாட்டீர்கள்...
சுவாசம்பட்டால் சுடுகாடு போய்விடமாட்டீர்கள்...
எங்கள் எச்சில்கூட ஏதும் செய்யாதுங்களை...

மனங்களையும்.... மனிதத்தையும்....
விசாலமாய்த்திறந்துகொள்ளுங்கள்...
அன்பும்... அரவணைப்பும்...
எங்களையும் தாங்கிக்கொள்ளட்டும்...
எல்லோர்க்கும் பொதுவான உலகில்
வாழும் சில நாட்களும்
வாழ்ந்துவிட்டுப்போகிறோமே நாங்களும்....!!!

No comments:

Post a Comment