
மண் புதைந்த கரங்களுடன்
எழுந்து நிற்கிறேன்....
உன்னிடம் எதுவும் பறிப்பதில்லை நான்....
உணர்ச்சிகளற்ற உன்னை நானென்பாய்
எனையறிந்தும் அறியாதவனாய்...
அது ஆறறிவின் குணமென்று பொருத்துநிற்கிறேன்...
இது என் தேசம்... நீ ஒண்டவந்தாய்...
நான் ஒதுக்கப்பட்டேன்...
நீ பெற்றுப்போட நான் வெட்டப்பட்டேன்...
நீ செத்தபோதும் நனே வெட்டப்பட்டேன்...
உன் ஒவ்வொரு அசைவிற்கும் நான் தேவை...
நீ அறிந்துகொள்... எனக்கு நீ தேவையில்லை...
நான் காப்பவன்... நீதானே அழிப்பவன்...
நீ சுவாசிக்கும் காற்றும்..
ஜீவிக்கும் நீரும் எனது பிச்சை...
இந்த மண்ணிற்கு உரமும்...
நீ உயிர்வாழ பலமும்… எனது கொடை...
வான் பெய்யும் மழையும்...
மண்ணோடும் நதியும்... என் ஸ்ருஷ்டி...
சுயநலத்தின் குத்தகைக்காரன் நீ...
உனக்குமாய் உணவு சேர்ப்பவன் நான்...
காக்கைக்கும்.... குயிலிற்கும்
பேதமை இல்லை என்னில்...
என் உடல் தறித்த நீ விட்டுவைத்தால்
மீண்டும் தளிர்த்துக்கொள்வேன்...
கலைப்படைவாய் நீ.. என் கீழே வந்தொதுங்கு...
நிழல்தருவேன் நான் மறுப்பின்றி உனக்குமாய்...
பேதை மனிதா…. ஒருமொழி கேளாய்
உயர்தினையென்று.. நீயே உன்னை பீத்திக்கொள்...
மரமென்று மட்டும் உனை வையாதே....
நாங்கள் உயர்ந்தவர்கள்....

No comments:
Post a Comment