
நான் கவிஞன் அல்ல...
எண்ணங்களின் பகிர்வாளன்...
கவிதை சொல்லத்தெரியாது...
ஏதோ ஒன்றை எழுதத் தெரியும்....
இருந்தும் நண்பி சொன்னாள்...
கவி சொல் என்று....
கரு எது… நான் கேட்க...
“ஏக்கம்” என சொல்லிச்சென்றாள்...
அடி பெண்னே...
அது ஒற்றைச்சொல் அல்ல...
உணர்வுகளின் கருவூலம்...
பெரியோனே தெளிதல் கடிது...
நான் சிறியோன்...
இது சுமை சொல்...
எங்கே தொடங்குவேன்....
கூடு கலைந்து பறந்தோடி
எட்டநின்று கண்ணீர்விடும்
ஈழத்து அகதிக்குருவிகளின்
ஏக்கத்தை தவிப்புடன் சொல்வேனா...!
சாட்சியின்றி புதைந்துபோன
உறவுகளின் ஆன்மாக்கள் இங்கே
எம்மிடேயே புலம்பி அழும் ஏக்கத்தை
நானும்…தமிழனாய் சொல்வேனா....!
வித்திட்டவர் சிதைந்துபோக
வாழ்வின் அடி நுனி சிக்கலில்
சிக்கித்தவிக்கும் எம் பிஞ்சுகளின்
ஏக்கத்தை… கதறலுன் சொல்வேனா...!
தாய் மண் மடியில் மறுக்கப்பட்டவாழ்வுதேடி
கூடிக்கழித்த உறவுகள்.. நண்பர்கள் விலக்கி
இரவல் மண்மிதித்து மிதியடியாய் வாழும்
எம் சோதரர் ஏக்கங்களை
விழிகசிய நான் சொல்வேனா...!
இல்லை... இவைவிடுத்து வெளிச்சென்று....
பொன்னிற்காய்... பொருளிற்காய்...
பெண்ணிற்காய்... ஏங்குகின்ற
பேதைகளின் ஏக்கம் என்று...!
தொலைந்துபோன பொருள்தேடி
தோற்றுப்போனவன் ஏக்கம் என்று...!
தவறிவிட்ட உறவுதந்த
வெறுமையின் உள்ளிருந்து
பிரிவு சுமந்தவன் ஏக்கம் என்று...!
உடைந்துபோன காதலுக்காய்
ஆயுளின் இறுதி நிமிடநேரம் வரையில்
வெளித்தெரியாமல் பொத்தி வைத்திருக்கும்
காதலித்தவர் ஏக்கம் என்று...!
பொழுதுகளெல்லாம் உறங்கிகெடுத்து
இருண்டபின் விழித்தெழுந்து
புலம்புபவனின் பொருள்ளற்ற ஏக்கம் என்று...!
பலன் பார்த்து.. நட்சத்திரம் பார்த்து
செயல் காணும் மூடர்களின்
நல்லநாள் பற்றிய பலனற்ற ஏக்கம் என்று…!
இப்படியாய்... இன்னும்.. இன்னுமாய்...
ஓராயிரம் பார்வைகொண்ட
ஒற்றைச்சொல்லடி இவ் ''ஏக்கம்''...
நான் சிறியோன்...
தொடாதது இன்னும் அதிகம்....
தொட்டதோ இங்கே கொஞ்சம்....
என்னை ஆட்டிவைக்கின்றது இந்த ஏக்கம்...
நான் எப்படிச்சொல்வேன் எனும் ஏக்கம்....
மன்னித்துவிடு...
நான் கவிஞன் அல்ல...
எண்ணங்களின் பகிர்வாளன்...
கவிதை சொல்லத்தெரியாது...
ஏதோ ஒன்றை எழுதத் தெரியும்....!!!

No comments:
Post a Comment